"பரிகாரங்களைச் செய்தும் பலன் கிடைக்கவில்லையே ஏன்? ஜோதிடத்திற்கும், கோவில் வழிபாடு, பரிகாரங்களுக்கும் சம்பந்தம் உண்டா? ஜோதிடம்மூலம் எதிர்கால வாழ்வில் உண்டாகும் நன்மை- தீமைகளை அறிந்துகொள்ளமுடியுமா? பணம், பொருட்களைப் பிறருக்கு தானம் செய்தால், பாவ- சாபம், விதி- வினைகள் மாறிவிடுமா? ஒரு ஜாதகனுக்கு ஒவ்வொரு ஜோதிடரும் வெவ்வேறு பலன்களைக் கூறுகிறார்களே- இதில் எவர் கூறுவது உண்மை என எப்படி அறிந்துகொள்வது?' என இதுபோன்று பல கேள்விகளை வாசகர்கள் கேட்டுள்ளார்கள்.
பரிகாரம் என்றால் என்ன? பரிகாரம் செய்தால், முற்பிறவி பாவ- சாப வினைகள் தீர்ந்து நன்மை கிடைக்குமா என்பதற்குரிய பதிலை அறிவோம்.
"பரிகாரம்' என்ற சொல்லைப் பிரித்தால் "பரி+ஆரம்' என வரும். இதில் "பரி' என்பது குதிரை. "ஆரம்' என்பது, அந்த குதிரையைக் கட்டும் கயிற்றினைக் குறிக்கும். இங்கு குதிரை என்பது ஒரு மனிதனையும், கட்டும் கயிறு (ஆரம்) என்பது அவனது முற்பிறவி பாவ- சாப- புண்ணிய கர்மவினைப் பதிவுகளையும், அந்தக் கயிறு கட்டப்பட்டுள்ள "முளை' அவனது இந்தப் பிறவியையும் குறிக்கிறது.
ஒரு குதிரையைப் பத்தடி நீளமுள்ள கயிற்றினால் கட்டிவைத்தால், அந்தக் கயிற்றின் நீளமுள்ள சுற்றளவில், அங் குள்ள புற்களை மேய்ந்துகொள்ளலாம்; படுக்கலாம்; நிற்கலாம்.
அந்தக் குதிரை பத்தடிக்கு அப்பாலுள்ள புல்லை மேய்வதற்கு ஆசைப்பட்டு முயற்சி செய்தால், அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிறு கழுத்தை இறுக்கித் துன்பம் தரும். இதனால் குதிரை கயிறால் கழுத்து இறுகி இறந்துகூட போகலாம்.
ஒரு குதிரை இருபது அல்லது முப்பதடி நீளமுள்ள கயிற்றால் கட்டப்பட்டிருந்தால் அதிக அளவு நிலப்பரப்பில் மேய்ந்து நல்ல திடகாத்திரமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். குதிரையைக் கட்டும் கயிற்றின் நீளம் கூடக்கூட குதிரை மிக்க சந்தோஷமான- சவுகரியமான வாழ்க்கையை வாழும்.
பத்தடி நீளமுள்ள கயிற்றில் கட்டப் பட்டுள்ள குதிரை பூஜை, ஹோமம் செய்து, மந்திரங்களை ஜெபித்து, விரதமிருந்து, இன்னும் பலவிதமான பரிகாரங்களைச் செயதாலும், கயிறு வளர்ந்து ஐம்பதடி நீளமுள்ளதாகாது என்பதே உண்மை.
இதுபோன்றுதான் ஒவ்வொருவரும் தாய்- தந்தை, கணவன்- மனைவி, குழந்தை, குடும்பம், உறவுகள், தொழில், வருமானம், பதவி, புகழ், செல்வம், நோய், சிரமம், தடைகள், வறுமை என அனைத்திலும் நன்மை- தீமை என அனுபவிக்க, முற்பிறவி பாவ- சாப- புண்ணிய கர்மவினைகள் என்ற கயிற்றால், அவரவர் வினையளவு, விதியளவு நன்மை- தீமைகள் நிர்ணயிக்கப்பட்டுப் பிறக்கிறார்கள்.
ஒருவரின் பிறப்புமுதல் இறப்புவரை அவர் இப்பிறவியில் அனுபவிக்கவேண்டிய நன்மை- தீமைகள் அனைத்தும், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் ஏழாவது மாதத்திலேயே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. அதனைப் பரிகாரங்களாலும் மாற்றமுடியாது. இதைப் புரிந்துகொள்ளாமல், சம்பாதித்த பணத்தை விரயம் செய்து, பரிகாரங்களைச் செய்து அலைந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கு விஷ்ணுபுராணத்தில் ஒரு கதை கூறப் பட்டுள்ளது.
பூமியில் உயிர்களைப் படைக்கும் பிரம்மதேவன், தனது படைப்பு தொழிலுக்கு உதவியாக பிருகு, புலஸ்தியர், கிரது, அங்கீரசு, மரீசி, அத்திரி, வசிஷ்டர், தசர், நாரதர் என ஒன்பது பேரை தனது மனதாலேயே புத்திரகளாகப் படைத்து தனது தொழிலுக்கு உதவியாக இருக்கும்படி கூறினார்.
இவர்களில் பிருகு முனிவரைத் தவிர மற்ற எட்டு பேரும் படைப்புத் தொழிலைச் செய்யமுடியாதென மறுத்துவிடடனர். பிருகு முனிவர் மட்டும் ஒப்புக்கொண்டு பூமியில் உயிர்களைப் படைக்கத் தொடங்கினார்.
பிருகு முனிவர், தான் படைக்கும் அனைத்து மனிதர்களையும், காமம், குரோதம், மதம், மாத்சரியம், சுயநல குணங்கள் இல்லாத- ஞானம், அறிவு, அன்பு, ஒற்றுமை என நற்குணங்கள் கொண்டவர்களாகவே படைத்தார். இதனையறிந்த பிரம்மா, பிருகுவிடம், "பூமியில் மனிதர்களைப் படைக்கும்போது, அரவரர் முற்பிறவியில் செய்த பாவ- புண்ணியங்களைக் கணக்கிட்டு, இந்தப் பிறவியில் அவற்றுக்குரிய நன்மை- தீமைகளை அனுபவிக்கும்படியும், எந்த சக்தியாலும் மாற்றமுடியாத விதி அமைப்பு டனும் பிறப்பிக்கவேண்டும்.
மும்மூர்த்திகளும், தேவர்களும், கிரகங்களும் பாவங்கள் செய்து சாபங்களைப் பெற்று, பூமியில் மனிதர்களாகப் பிறந்தாலும், அவர்கள் செய்த பாவங்களுக்குரிய தண்டனையை, தங்கள் கடவுள் சக்தியால் தடுத்து மாற்றிக்கொள்ள முடியாதபடி, அனுபவித்துதான் தீர்க்கவேண்டும் என்பதைப் புரிந்து, படைக்கவேண்டும்' என்றார். பூமியில் மனிதர்களின் பிறப்பின் விதி இதுதான்.
கிருஷ்ணரும், தன் இளம்வயது வாழ்க்கை யில் எதிரிகளையும், உயிருக்கு ஆபத்து தரக்கூடிய கண்டங்களையும் அனுபவித்து வாழ்ந்தார். இவையனைத்தையும் கடவுளை வணங்கியோ, தனது கடவுள் சக்தியினைப் பயன்படுத்தியோ, பரிகாரங்களைச் செய்தோ தீர்த்துக் கொள்ள வில்லை; முற்பிறவி வினை, விதியை மாற்றிக் கொள்ளவில்லை. தனது புத்தியாலும், யுக்தி யாலும், உடல்பலத்தாலும், உழைப்பினாலும் மட்டுமே தடுத்து, தப்பித்து உயர்வான வாழ்க்கை யைத் தன் முயற்சி, செயல்களால் அமைத்துக் கொண்டு வாழ்ந்தார்.
(தொடரும்)
செல்: 99441 13267